Tuesday, 12 August 2008

அரசாங்கம், விடுதலைப் புலிகளுடன் இரகசியப் பேச்சுவார்த்தை- எதிர்க்கட்சி குற்றச்சாட்டு; அரசாங்கம் மறுப்பு

அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இரகசியப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருப்பதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. விடுதலைப் புலிகளுக்கும், அரசாங்கத்தின் கீழ்மட்ட அதிகாரிகளுக்கும் இடையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருப்பதாக எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க குற்றஞ்சாட்டினார்.

சார்க் உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்திருந்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துவிட்டுச் சென்ற பின்னரே இந்த இரகசியப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் கூறினார். மோதல்களை அரசாங்கம் பிரசார ஊடகமாகப் பயன்படுத்தி வருவதாக கருணாநாயக்க குறிப்பிட்டார்.

இனப்பிரச்சினை மற்றும் மோதல்கள் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி மௌனம் சாதித்து வருகிறதே என்ற குற்றச்சாட்டுத் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவர், “தேசிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை நாங்கள் மௌனமாக அவதானிக்கிறோம்” என்றார்.

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்தபோது பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கு வெற்றிகரமான தாக்குதல்களை முன்னெடுத்திருந்ததாகவும், 1994ஆம் ஆண்டு தேர்தலின் போது கிழக்கைப் பாதுகாத்திருந்ததாகவும் அவர் கூறினார். “அதன் பின்னர் விடுதலைப் புலிகள் கிழக்கை மீட்பதற்கு யார் உதவியிருந்தார்கள்” என ரவி கருணாநாயக்க கேள்வியெழுப்பினார்.

மோதலை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக கால எல்லையொன்றை வரையறுத்துக்கொள்ள தற்போதைய அரசாங்கம் தவறிவிட்டதாகக் குற்றஞ்சாட்டிய ரவி கருணாநாயக்க, “2008ஆம் ஆண்டு மார்ச்சுடன் மோதல்கள் முடிவுக்கு வரும் என அரசாங்கம் முன்னர் கூறியது. எனினும், இன்னும் 20 வருடங்களுக்கு இந்த மோதல்கள் தொடரும் என சில இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்” என்றார்.

இரகசியப் பேச்சுவார்த்தைகளில் அரசாங்கம் ஈடுபடவில்லை- நிமால் சிறிபால.டி.சில்வா

விடுதலைப் புலிகளுடன், அரசாங்கம் இரகசியப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதாக ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டை அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் நிமால் சிறிபால.டி.சில்வா மறுத்துள்ளார்.

“இது ஐக்கிய தேசியக் கட்சியின் அப்பட்டமான பொய். ரணில் விக்ரமசிங்க அரசாங்கமே விடுதலைப் புலிகளுடன் இரகசிய உடன்பாட்டில் கைச்சாத்திட்டது. பாராளுமன்றத்துக்கு அறிவிக்காமலேயே போர்நிறுத்த உடன்படிக்கை அப்பொழுது கைச்சாத்திடப்பட்டிருந்தது” என அமைச்சர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

No comments: