Tuesday, 12 August 2008

வருட இறுதிக்குள் கிளிநொச்சி கைப்பற்றப்பட்டுவிடும்- கோதபாய ராஜபக்ஷ நம்பிக்கை

இந்த வருட இறுதிக்குள் விடுதலைப் புலிகளின் தலைநகரான கிளிநொச்சியை இராணுவத்தினர் கைப்பற்றிவிடுவார்கள் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், ஜனாதிபதியின் சகோதரருமான கோதபாய ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

“விடுதலைப் புலிகளின் தலைநகரான கிளிநொச்சியை அடுத்த நான்கு மாதங்களில் கைப்பற்றும் குறிக்கோளுடன் இராணுவத்தினர் போராடிவருகின்றனர். இந்த வருட இறுதியில் அதனைக் கைப்பற்றுவது சாத்தியப்படும்” என லண்டன் டைம்சுக்கு கோதபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

“அவர்களைக் காட்டுக்குள் தள்ளிவிட்டுக் காத்துக்கொண்டிருக்க முடியாது. அவர்களைத் தேடி முற்றாக அழிக்கவேண்டும். அதன் மூலம் மாத்திரமே சமாதானத்தை அடையமுடியும்” என்றார் அவர்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்த 6,500 சதுரக் கிலோ மீற்றர் பரப்பளவை, 5,000 சதுரக்கிலோ மீற்றராகக் குறைத்திருப்பதாகவும், உறுப்பினர்களின் எண்ணிக்கையை 13 ஆயிரத்திலிருந்து 5 ஆயிரமாகக் குறைத்திருப்பதாகவும் இலங்கை இராணுவத்தினர் கூறியிருப்பதாக லண்டன் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த வார இறுதியில் இடம்பெற்ற மோதல்களில் 115 இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி அந்தப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மோதல்கள் இடம்பெறும் பகுதிகளுக்கு ஊடகவியலாளர்கள் செல்ல அனுமதி இல்லையென்பதால் விடுதலைப் புலிகள் உண்மையாக இழப்புக்கள் ஏற்படுகின்றனவா அல்லது இராணுவத்தினரின் தாக்குதல்களை முகம்கொடுக்காமல் விலகிச் செல்கிறார்களா என்பதை அறியமுடியாதிருப்பதாகவும் லண்டன் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இந்த மோதல்களில் இராணுவத்தினருக்கு வெற்றியேற்பட்டால் என்ன இழப்பின் விலையாக இந்த வெற்றி கிடைத்தது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது எனவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னிக்கு உணவுப் பொருள்களை அனுப்ப இராணுவம் இணக்கம்

இதேவேளை, வடபகுதியில் முன்னெடுக்கப்படும் மோதல்கள் காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன், அவர்களுக்கான உணவுப் பொருள்கள் மிகவும் குறைந்தளவே இருப்பதாக மனிதநேய அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

வன்னிப் பிரதேசத்திற்குத் தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களை 20 லொறிகளில் ஓமந்தை சோதனைச் சாவடியூடாக அனுப்புவதற்கு, வன்னிப் பிராந்திய பாதுகாப்புப் படை அதிகாரிகள் இணங்கியுள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் எஸ்.சண்முகம் தெரிவித்துள்ளார்.

வவுனியா, மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் அரசாங்க அதிபர்களுக்கும், வன்னிப் பிராந்திய இராணுவத் தளபதி மேஜர் ஜென்ரல் ஜகத் ஜயசூரிய தலைமையிலான இராணுவ அதிகாரிகளுக்குமிடையில் நேற்று நடைபெற்றுள்ள சந்திப்பிலேயே, இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த சந்திப்பின் போது ஓமந்தை சோதனைச் சாவடியூடாக தினமும் வன்னிக்கு 20 லொறிகளில் அத்தியாவசியப் உணவுப் பொருட்கள் அனுப்பப்படுவது தொடர்பில் இராணுவத் தரப்புடன் இணக்கப்பாடொன்றை கண்டிருந்த போதிலும், அந்த எண்ணிக்கை இன்னமும் சரியாக பேணப்படாமை குறித்து அரசாங்க அதிபர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments: