Wednesday, 13 August 2008

லண்டன் குடிவரவு சட்டவிதிகளை மீறிய இலங்கையர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்


மாணவர் வீசா ஒன்றின் மூலம் பிரித்தானியாவிற்கு செல்ல முற்பட்ட இலங்கையர் ஒருவரை பிரித்தானிய எல்லைப் பாதுகாப்புப் பிரிவினர் கைது செய்து நாடு கடத்தியுள்ளனர்.
குறித்த இலங்கையர் நொர்ட்ஹெம்டனில் உள்ள இரவுநேரக் கேளிக்கை விடுதியொன்றில் பணியாற்றி வந்துள்ளமை விசாரணைகளை மூலம் தெரியவந்துள்ளது.

விடுமுறையைக் கழிப்பதற்காக இலங்கைக்கு வந்து மீண்டும் லண்டன் திரும்பிய சந்தர்ப்பத்தில் குறித்த இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார்.

லண்டன் பல்கலைக்கழகமொன்றில் உயர் கல்வி கற்பதாகவும், அதற்கான ஆவணங்களையும் குறித்த இலங்கையர் சமர்ப்பித்துள்ளார்.

எனினும், தீவிர விசாரணைகளை மேற்கொண்ட எல்லைப் பாதுகாப்புப் பிரிவினர் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் போலியாகத் தயாரிக்கப்பட்டவை என்பதனைக் கண்டு பிடித்துள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் ஐக்கிய இராச்சியத்தில் வெளிநாட்டவர்கள் தொழில் புரிவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாதென அந்நாட்டு உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

மாணவர் வீசாக்களைப் பயன்படுத்தி முழு நேரத் தொழிலில் ஈடுபடுவதனை ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருட இறுதியில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசேட அடையாள அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பிரித்தானியாவில் இயங்கும் உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பிலான சட்டவிதிகள் மேலும் கடுமையாக்கப்படவுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments: