Saturday, 9 August 2008

ரஷ்ய தாக்குதலைத் தொடர்ந்து ஜார்ஜியாவில் யுத்த நிலை பிரகடனம்



ரஷிய ஆதரவு பிரிவினைவாதிகள் மீது ஜார்ஜியா ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது. இதைத்தொடர்ந்து ஜார்ஜியா தலைநகர் மீது ரஷிய போர் விமானங்கள் சரமாரியாக குண்டுவீசின. சண்டையில் நூற்றுக்கணக்கானோர் பலியாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

திடீர் சண்டை

முன்னாள் சோவியத் ïனியன் நாடுகளில் ஒன்றான ஜார்ஜியாவில் ரஷிய எல்லையில் அமைந்துள்ளது பகுதி தெற்கு ஓஸ்டியா. ஜார்ஜியாவில் இருந்து இந்த பகுதியை பிரித்து தனி நாடாக அறிவிக்கக்கோரி பிரிவினைவாதிகள் போராடி வருகின்றனர்.

அண்மைகாலமாக அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியாக ஜார்ஜியா மாறி வருவதால், தெற்கு ஓஸ்டியா பிரிவினைவாதிகளுக்கு ரஷியா ஆதரவு அளித்து வருவதாக கூறப்படுகிறது.
http://cache.daylife.com/imageserve/0gFn2gd8QGdKG/550x.jpg
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் தெற்கு ஓஸ்டியா பகுதியில் செயல்படும் பிரிவினைவாதிகள் மீது ஜார்ஜியா ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து தலைநகர் டிக்சின்வாலியில் இரு தரப்பினருக்கும் இடையே உக்கிரமான சண்டை வெடித்தது. நேற்று 2-வது நாளாக இந்த சண்டை நீடித்தது.

ரஷிய விமானங்கள் குண்டுவீச்சு

இதற்கிடையே தெற்கு ஓஸ்டியா பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்த தங்கள் ராணுவத்தை சேர்ந்த 10 வீரர்களை ஜார்ஜியா ராணுவம் கொன்று விட்டதாக ரஷியா குற்றம் சாட்டியது. இதைத்தொடர்ந்து ரஷிய ராணுவத்தின் தரைப்படை பிரிவு ஒன்று நேற்றுமுன்தினம் தெற்கு ஓஸ்டியா பகுதிக்குள் அதிரடியாக புகுந்தது.

மேலும் ஜார்ஜியா தலைநகர் டிபிசிலியின் புறநகர் பகுதியில் உள்ள வாசியானி ராணுவ தளம் மீது ரஷிய போர் விமானங்கள் சரமாரியாக குண்டுவீசின. பாகு-டிபிசிலி-சிகான் எண்ணை குழாய் செல்லும் பகுதியில் இந்த குண்டுகள் விழுந்து வெடித்தன.

இதுதவிர வேறு இரண்டு ராணுவ தளங்களும், கருங்கடல் பகுதியில் உள்ள போதி துறைமுகமும் ரஷிய குண்டுவீச்சுக்கு ஆளாயின. இதில் துறைமுகத்தில் பலத்த சேதம் ஏற்பட்டது. அங்கு நிறுத்தப்பட்டு இருந்த எண்ணை கப்பல்கள் தீப்பற்றி எரிந்தன. கப்பல் கட்டும் தொழிற்சாலை முற்றிலும் சேதம் அடைந்தது.

8 முதல் 11 ரஷிய விமானங்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டன என்று ஜார்ஜியா பொருளாதார வளர்ச்சி துணை மந்திரி வாடோ கூறினார்.

நூற்றுக்கணக்கானோர் பலி?

தெற்கு ஓஸ்டியா பகுதியில் நடைபெறும் சண்டை மற்றும் ரஷிய விமானங்கள் குண்டுவீச்சு ஆகியவற்றில் நூற்றுக்கணக்கானோர் பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் சேத விவரம் பற்றி எதுவும் தெரியவில்லை என ஜார்ஜியா உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் உதியாஸ்விலி தெரிவித்தார்.

பிரிவினைவாதிகள் தாக்குதல் நடத்தியதால்தான் நாங்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தோம் என்று அவர் கூறினார். ஆனால் ஜார்ஜியா அரசாங்கம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி விட்டதாக பிரிவினைவாதிகள் குற்றம் சாட்டினர்.

தெற்கு ஓஸ்டியா பகுதியில் நடைபெறும் இந்த மோதலால், ஜார்ஜியா-ரஷியா இடையில் முழு அளவில் போர் வெடிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

அமெரிக்கா வலியுறுத்தல்

இதற்கிடையே ஜார்ஜியா மீது தாக்குதல் நடத்துவதை ரஷியா உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா வற்புறுத்தி உள்ளது.

ஜார்ஜியாவின் இறையாண்மையை ரஷியா மதித்து நடக்க வேண்டும். அந்த நாட்டுக்குள் அனுப்பி உள்ள படைப்பிரிவை வாபஸ் பெற வேண்டும்.

சண்டையை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா தனது சிறப்பு தூதரை அனுப்பி வைக்கும் என்று அந்நாட்டின் வெளியுறவு மந்திரி கண்டலீசா ரைஸ் தெரிவித்தார்.

No comments: