அகதியாக தன்னை மீளப்பதிவு செய்து கொள்ளாத இலங்கைத் தமிழர் ஒருவரை தமிழக காவற்துறையினர் சென்னையில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட்8) கைதுசெய்துள்ளனர்.
கொழும்பைச் சேர்ந்த 37 வயதான பெரியசாமி சசிதரன் என்ற சூரியகுமார் என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு வரை அகதி அந்தஸ்த்தில் தங்கியிருந்ததாகவும் தன்னை மீளப்பதிவு செய்து கொள்ளாத நிலையில் சென்னையில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்ததாகவும் தமிழக காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதேவேளை இந்தியாவின் சென்னை நகரில் மேலும் 6 இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பொங்களூர் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளை அடுத்து சென்னை உட்பட இந்தியாவின் பல நகரங்களில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் வாகனம் ஒன்றை காவல்துறையினர் சோதனையிட்ட போது இந்த 6 இலங்கையரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறையினருக்கு உரிய பதிலை வழங்காத நிலையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கும் விடுதலைப்புலிகளும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தமிழக காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:
Post a Comment