Saturday, 9 August 2008

விடுதலைப் புலிகளுடன் அரசாங்கம் போர் நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள ரகசிய திட்டம்?

விடுதலைப்புலிகளுடன் அரசாங்கம் போர் நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அரசாங்கத்தின் நம்பிக்கைக்குரி ரகசிய தகவல் ஒன்று கூறுவதாக ஜே.வீ.பீ தரப்புச் செய்திகள் கூறுகின்றன.

இவ்வாறான போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தும் முயற்சிக்கு பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகள் எழக்கூடும் எனவும் அந்த தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இதனால் அரசாங்கம் இந்த போர் நிறுத்தம் தொடர்பான யோசனையை விடுதலைப்புலிகள் மற்றும் சர்வதேச தரப்பின் ஊடாக முன்வைக்க முயற்சித்து வருகிறது. இதனை செயற்படுத்துவதற்காக தற்போது ரகசிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளிடம் நேரடியாக மாத்திரமல்ல சர்வதேசத் தரப்புகளின் உதவியை அரசாங்கம் நாட எண்ணியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளுடன் அரசாங்கம் ரகசிய பேச்சுக்களை நடத்தி வருகிறது எனவும் கூறப்படுகிறது.

முக்கியமாக இந்திய அரசு இதன் பின்னனியில் இருப்பதாகவும் அண்மையில் இலங்கை சென்ற இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனுடன் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் சிலர் பேச்சுக்களை நடத்தியதுடன் விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் இணக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அரசாங்கத்தின் ரகசிய தரப்பு தகவல்கள் கூறுவதாக ஜே.வீ.பீ தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments: