Wednesday, 6 August 2008

‘சீபா’ ஒப்பந்தத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு

இந்தியாவுடன் இலங்கை அரசு செய்வதற்குத் திட்டமிட்டிருக்கும் விசால பொருளாதார பங்குதாரர் ஒப்பந்தத்துக்கு (Comprehensive Economic Partnership Agreement– CEPA) தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தை யார் எதிர்த்தாலும் எதிர்ப்பவர்களை ஓரத்தில் ஒதுக்கிவிட்டு அரசு இதில் கைச்சாத்திட வேண்டுமென கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (05) இடம்பெற்ற இந்த ஒப்பந்தம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே சம்பந்தன் இவ்வாறு கூறினார். இலங்கையில் உள்ள தலைவர்கள் சமாதானத்தையோ அல்லது பொருளாதார வளர்ச்சியையோ விரும்பவில்லை. அதனால் தான் இந்தியாவுடன் பொருளாதார ஒப்பந்தம் செய்வதை அவர்கள் எதிர்க்கின்றனர்.

‘சீபா’ ஒப்பந்தம் இந்நாட்டுக்கு நன்மையளிக்கக்கூடியது. இதனால் எமது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும். அரசு இந்த நல்ல வாய்ப்பைத் தவறவிடக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.

உண்மையில் சார்க்மாநாட்டில் கலந்துகொள்ளவதற்காக இந்தியப் பிரதமர் இலங்கை வந்தபோதே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருக்க வேண்டும். சிலரின் தேவையற்ற எதிர்ப்பால் அது நடக்கவில்லை. குறுகிய மனம் படைத்தவர்களே இந்த ஒப்பந்தத்தை எதிர்க்கின்றனர் என்றும் தெரிவித்தார்.

No comments: