Wednesday, 13 August 2008

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வே தேவை-நாராயணனின் கருத்துக்கு கோதபாய பதில்

இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான எமது உண்மையான அக்கறையையும், நேர்மைத்தன்மையையும் வெளியுலகுக்குக் காட்ட நாம் தவறிவிட்டோம் எனக் குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, அது தொடர்பில் தாம் சிறந்த பிரச்சாரங்களை மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.


தமிழ் மக்கள் இலங்கை அரசாங்கத்தின் பக்கம் இல்லை எனவும், இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் இலங்கை அரசாங்கம் தனது அக்கறையை வெளியுலகுக்குக் காட்டத் தவறிவிட்டது எனவும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாரயணன் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்த கருத்துக்கு, பதிலளிக்கும் வகையிலேயே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழ் மக்கள் எங்கள் பக்கம் இல்லையானால், அது எங்களின் பலவீனமே என்றும் கோதபாய ராஜபக்ஷ இந்திய ஊடகம் ஒன்றுக்கு தொலைபேசி மூலம் வழங்கிய செவ்வியில் தெரிவித்திருக்கிறார்.

"நாராயணன் கூறியதில் எந்த பாதகமான கருத்துக்களும் இல்லை. எனது கருத்தின்படி, எமது ஜனாதிபதி கூறியவைகளையே அவர் வேறுவார்த்தைகளில் கூறியிருக்கிறார். நாம் பயங்கரவாதத்தை தோற்கடிக்க வேணடும். ஆனால் இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியாகவே தீர்வு காணப்படவேண்டும்" என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்திருக்கிறார்.

"இந்திய பாதுகாப்பு ஆலோசகர் கூறியதில் இலங்கைக்கு எதிராக எந்த மோசமான கருத்துக்களும் இல்லை. அவர் முக்கியமாக இராணுவ நடவடிக்கை வெற்றிபெறும் என்றே கூறியிருக்கிறார். அத்துடன் அவர் விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடாத்த வேண்டும் எனக் கூறவில்லை. இவை எல்லாம் அதிலுள்ள சாதகமான விடயங்கள்" என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: