Wednesday, 13 August 2008

உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைகளை அரசாங்கம் புறக்கணித்துள்ளது- ஜனாதிபதி

உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றின் ஆலோசனைகளைப் புறக்கணித்து அரசாங்கத்தின் கொள்கைகள் மூலம் உணவுப் பிரச்சினையை முடிவுக்குக்கொண்டுவரமுடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விவசாய நிலங்களை நிரப்பி அவற்றின் மேல் கட்டடங்களைக் கட்டி, வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருள்களை இறக்குமதி செய்யுமாறு உலக வங்கி மற்றும் சர்வதேச நாயணநிதியம் ஆகியன தமக்கு ஆலோசனை வழங்கியிருப்பதாக அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஜனாதிபதி கூறினார்.

“எனினும், உலக வங்கி அல்லது சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைகளை நாங்கள் செவிமடுக்கவில்லை. கடந்த பல வருடங்களாக நாங்கள் உணவு மற்றும் எரிபொருள் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றோம். 2010ஆம் ஆண்டில் உணவு மற்றும் சக்திவலுவுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என நாங்கள் உணர்ந்துள்ளோம். அதனால்தான் அரசாங்கம் 'அபி வவமு-ரட ஹதமு' திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டே நுரைச்சோலை அனல்மின் உற்பத்தி நிலையம், உமாஓய மற்றும் மேற்கொத்மலைத் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது” என்றார் ஜனாதிபதி.

“எதிர்க்கட்சியிலுள்ள சிலர் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்கு முற்படுகின்றனர். எனினும், அரசாங்கத்தின் சவாலை எதிர்கொள்ள அவர்கள் தவறியுள்ளனர். மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊடக சுத்திரம் இல்லையெனக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தாலும் ஜப்பான், சீனா, இந்தியா, ஈரான், பாகிஸ்தான் போன்ற நட்பு நாடுகளிடமிருந்தும், உதவி வழங்கும் நாடுகளிடமிருந்து உதவிப் பொருள்கள் தொடர்ந்தும் கிடைத்தவண்ணமே இருக்கின்றன” என ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டார்.

அதேநேரம், மோசடியில் ஈடுபடும் எவரையும் காப்பாற்றுவதற்குத் தான் முயற்சிக்கவில்லையெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மோசடியில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணைகளை நடத்துவதற்கு பொலிஸார் இருப்பதாகவும் கூறினார்.

No comments: