பொலனறுவை மாவட்டத்திலுள்ள எகடபத்துவ கிராமத்தின் நிருவாகத்தை, அரசாங்கம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிடம் ஒப்படைப்பதற்கு உடன்பட்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கபண்;டார இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
வடமத்திய மாகாணசபைத் தேர்தலை முன்னிட்டு அரசாங்கம் த.ம.வி.புலிகள் அமைப்புடன் 5 அம்சங்கள் அடங்கிய இரகசிய உடன்படிக்கை ஒன்றை செய்துகொண்டுள்ளதாகவும் அவர் இங்கு குறிப்பிட்டார்.
எகடபத்துவ கிராமத்தில் த.ம.வி.புலிகள் அமைப்பின் முகாம்களை அமைத்தல், மாகாணசபைத் தேர்தலின் பின்னர் த.ம.வி.புலிகள் அமைப்பின் அங்கத்தவர்களின் குடும்பங்களை அங்கு குடியேற்றல், எகபடபத்துவ பிரதேச நிருவாகத்தை வடமத்திய மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் த.ம.வி.புலிகள் அமைப்பின் உறுப்பினர் மங்களன் மாஸ்டரிடம் ஒப்படைத்தல், எகடபத்துவ கிராமத்தை மட்டக்களப்பு மாவட்டத்துடன் இணைத்தல், இக்கிராமத்தின் நிருவாக அதிகாரத்தை கிழக்கு மாகாணத்தின் கீழ் கொண்டுவரல் ஆகிய அம்சங்கள் அடங்கிய உடன்படிக்கையையே அரசாங்கம் த.ம.வி.புலிகள் அமைப்புன் செய்துகொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குறித்த கிராமத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினரின் முகாம்கள் இருப்பதன்காரணமாக அங்கு ஏனைய கட்சியனரால் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட முடியாதிருப்பதாகவும், தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்வோர்மீது அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கபண்;டார மேலும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment