Friday, 15 August 2008

தமிழீழ விடுதலைப் புலிகள் புதிய விமானத்தளமொன்றை அமைத்து வருகின்றனர்--தி ஐலண்ட்

தமிழீழ விடுதலைப் புலிகள் இரண்டாவது விமானத்தளமொன்றை அமைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகப் பிரபல ஆங்கில நாளேடொன்று செய்தி வெளியிட்டுள்ளது.


அரசாங்கப் படையினரின் விமானத் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் முல்லைத்தீவில் புதிய விமான இறங்குதளமொன்றை அமைத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


அரச படையினரின் வான் தாக்குதல் காரணமாக வன்னி முன்னரங்கப் பகுதியில் புலிகளுக்கு அதிக இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.


அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் விடுதலைப் புலிகளின் இரணமடுவில் அமைந்துள்ள இறங்குதளத்திற்குச் சேதமேற்பட்டுள்ளதாக இராணுவ உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.


தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களது முழுப் பலத்தைப் பயன்படுத்தி விமானத்தளம் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது அமைக்கப்பட்டுவரும் இறங்குதளத்தில் பாரிய விமானங்களை நிறுத்தக் கூடிய வசதிகள் காணப்படும் என இராணுவத் தரப்புத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

புலிகளின் இரண்டு விமான இறங்கு தளங்களும் ஏ-9 வீதிக்கு கிழக்காக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலிய ஆளில்லா உளவு விமானமொன்றின் மூலம் இந்தத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தி ஐலண்ட் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

No comments: