Wednesday, 6 August 2008

இந்தியாவில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளது எனும் செய்தியில் உண்மையில்லை-இந்திய பொலிஸ்

இந்தியாவின் புதுச்சேரி, காரைக்கல் ஆகிய பகுதிகள் விடுதலைப் புலிகளுக்கு உதவியளிக்கும் பிரதேசங்களாக மாறியிருக்கின்றன எனும் செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என இந்திய பொலிஸ் பணிப்பாளர் ஏ.எஸ்.கான் 'ஹிந்து' பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்க செயற்பாட்டாளரான நிக்ஷன் என்றழைக்கப்படும் க்ரிஷ்ண நீதன் என்பவர் என்பவர் புதுச்சேரியிலிருந்து சில பொருட்களை எடுத்துவரும்போது ராமநாதபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே பொலிஸ் பணிப்பாளர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்றுவருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், கைப்பற்றப்பட்ட பொருட்கள் இந்தியாவில் தடைசெய்யப்பட்டவை அல்ல எனவும், அவற்றை எந்தவொரு கடைகளிலும் வாங்கிக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்தப் பகுதிகள் விடுதலைப் புலிகளுக்கு உதவியளிக்கும் பகுதிகளாக மாறிவருகின்றன எனும் தகவல்களில் உண்மையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த சில மாதங்களில் இடம்பெற்ற தேசவிரோத செயற்பாடுகள் குறித்து இந்திய பொலிஸ் திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும், சந்தேகத்துக்கிடமான பொருட்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு பொலிஸ் நிலையங்களுக்கு சுற்றுநிருபம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments: