Sunday, 10 August 2008

இடம்பெயர்ந்த மக்கள் இலக்கு வைக்கப்படாதிருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் ஐ.நா கோரிக்கை

இடம்பெயர்ந்த மக்கள் இலக்கு வைக்கப்படாதிருப்பதையும் இராணுவ இலக்குகளுக்கு அருகில் தங்க வைக்கப்படாதிருப்பதையும் உறுதிப்படுத்துமாறு தாம் வலியுறுத்துவதாக அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகரலாயம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் தற்போதைய நடவடிக்கைகளையடுத்து பாதுகாப்பு தேடி இடம்பெயரும் மக்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கு அனுமதிக்குமாறு கோருவதாகவும் அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகரலயத்தின் பேச்சாளர் ரொன் ரெட்மொன்ட்
தெரிவித்துள்ளார்.


கரைச்சி பகுதியில் இடம்பெயர்ந்துள்ள 10000 குடும்பங்களில் பெரும்பாலானவற்றுடனான ஐ.நா.வின் தொடர்பு நிவாரண ஊழியர்களின் பாதுகாப்பு கருதி ஐ.நா. அக்கராயன் தெற்கு மற்றும் மேற்குடன் துண்டிக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்கள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் பல பகுதிகளில் தங்கியுள்ளனர்.

பெரும்பாலானோர் திறந்த வெளியில் தங்கியுள்ளனர். சில இடங்களில் அளவுக்கு அதிகமாக நிரம்பியுள்ளன. அவசர தேவைக்காகவென முன்னர் வரையறுக்கப்பட்ட இடங்களுக்கு அருகில் தற்போது இராணுவ
நடவடிக்கைகள் நெருங்கிவருவதால் அவ்விடங்களை பயன்படுத்தப்பட முடியாத நிலை உள்ளது.

ஐ.நா. உயர்ஸ்தானிகராலயமும் உள்ளூர் அதிகாரிகளும் ஏனைய முகவர் நிறுவனங்களும் அவசரகால கூடரங்களையும் உபகரணங்களையும் விநியோகித்துவருவதுடன் புதிதாக இடம் பெயர்ந்துவருபவர்களை தங்க வைப்பதற்கு ஏற்ற இடங்களை தேடி வருகின்றனர்.


பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சகல தரப்பினரையும் தாம் கோருவதுடன் தற்போதைய நடவடிக்கைகளில் பாதுகாப்பு தேடி இடம்பெயரும் மக்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கு அனுமதிக்குமாறும் உள்ளக இடம்பெயர்ந்த மக்கள் இலக்கு வைக்கப்படாதிருப்பதையும் இராணுவ இலக்குகளுக்கு அருகில் தங்க வைக்கப்படாதிருப்பதையும் உறுதிப்படுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.


இந்த நிலையில் அப்பகுதிக்கான பொருட்களை கொண்டுசெல்ல விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளினால் மனிதாபிமான நிறுவனங்கள் அபாயகரமானளவுக்கு குறைந்துவரும் உணவு, கூடார பொருட்கள், தண்ணீர் சுகாதர உபகரணங்கள், சிவிலியன்களின் போக்குவரத்துக்கான எரிபொருள் என்பனவற்றின் கையிருப்பை மீள்நிரப்ப முடியாதுள்ளது.


அதனால் அத்தியாவசியப் பொருட்களின் தடையற்ற விநியோகத்தை இயன்றவரை விரைவாக அனுமதிக்குமாறு கோருவதாகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மனிதாபிமான உதவிகள் கிடைக்கப்பெறுவதை அனுமதிக்குமாறும் அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகராலயம் வலியுறுத்துகிறது. இதன் மூலம் சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கும் நடைமுறைகளுக்கும் அமைவாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசிய உதவிகள் கிடைக்கப் பெறலாம் எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

No comments: