இனப்பிரச்சினைக்கு சமஷ்டி தீர்வை முன்வைக்க அரசாங்கம் முயற்சிப்பதால் எதிர்காலத்தில் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுக் கூட்டங்களில் கலந்துகொள்வதைத் தவிர்ப்பதற்கு ஆளும் கட்சியின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய தீர்மானித்துள்ளது.
இந்தத் தீர்மானம் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எழுத்துமூலம் நேற்று செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. சமஷ்டித் தீர்வை நோக்கி சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு செல்வதாகவும், இந்தக் கொள்கையுடன் தாம் இணங்கவில்லையெனவும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
“நாம் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றோம். சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவை விரைவில் விசாரணைக்கு உட்படுத்துமாறு ஜனாதிபதியிடம் நாங்கள் கோரிக்கை விடுக்கின்றோம்” என்றார் அவர்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் இணைத்துக்கொள்ளப்படும்வரை குழுக் கூட்டங்களில் கலந்துகொள்ளப் போவதில்லையென ஜாதிக ஹெல உறுமய மற்றும் மக்கள் ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகள் அறிவித்திருந்தன. தற்பொழுது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், ஜாதிக ஹெல உறுமய புதிய தீர்மானமொன்றை அறிவித்துள்ளது.
இதேவேளை, இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் கந்துகொள்ளுமாறு தேசிய சுதந்திர முன்னணிக்கும் அழைப்பு விடுக்கப்படவேண்டும் என சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் அமைச்சர், பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண கூறியுள்ளார்.
எனினும், சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் இணைந்து கொள்வது பற்றி கட்சிக்குள் இதுவரை கலந்துரையாடப்படவில்லையென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் இணைந்துகொள்ளுமாறு அழைப்புக் கிடைக்கப்பெற்ற பின்னரே அது பற்றித் தீர்மானிக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.
சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு இனப்பிரச்சினைக்கான இறுதித் தீர்வைக் காணும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதுடன், இதுவரை சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் 90வீதமான வேலைகள் பூர்த்திசெய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:
Post a Comment