Wednesday, 13 August 2008

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் தொடர்ந்தும் சிறுவர் போராளிகள்-யுனிசெப் குற்றச்சாட்டு; கருணா மறுப்பு

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினர் தொடர்ந்தும் சிறுவர் போராளிகளை வைத்திருப்பதாக யுனிசெப் குற்றஞ்சாட்டியுள்ளது.

இருப்பினும், யுனிசெப் அமைப்பின் குற்றச்சாட்டை மறுத்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் கருணா அம்மான், அமைப்பிலிருந்த சகல சிறுவர் போராளிகளும் விடுவிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

ஜூன் 30 ஆம் திகதி வரை 129 சிறுவர்களை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் படையில் சேர்த்திருப்பதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் யுனிசெப் தெரிவித்துள்ளது.

இவர்களில் 66 பேர் 18 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்கள் எனவும், ஏனைய 63 பேரும் படையில் சேர்க்கப்படும்போது 18 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களாகவே இருந்ததாகவும், தற்போது 18 வயதைத் தாண்டிவிட்டதாகவும் யுனிசெப் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சிறுவர் போராளிகள் தொடர்பாக மூன்று தினங்களுக்கு முன்னர் தான் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் கலந்துரையாடியதாக கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது, அமைப்பின் சிறுவர் போராளிகள் தொடர்பான விபரங்கள் அனைத்தும் மதிப்பீடு செய்யப்பட்டதாகவும், அந்தத் தகவல்களின்படி, குறித்த வயதுக்குக் கீழ்ப்பட்ட சிறுவர் போராளிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் கருணா மேலும் தெரிவித்துள்ளார்.

"முதலமைச்சர் சந்திரகாந்தனுடனும், அமைப்பின் ஏனைய சிரேஷ்ட உறுப்பினர்களுடனும் நான் இது தொடர்பாக கலந்துரையாடினேன். அதன்படி, நீண்ட நாட்களுக்கு முன்னரே சிறுவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுவிட்டார்கள்" என்றும் கருணா குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மேலும் சிறுவர் போராளிகளை வைத்திருப்பதாக இந்தக் கூட்டத்தின் பின்னர் யுனிசெப் அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்ட பின்னர், சிறுவர் போராளிகளை வைத்திருக்க வேண்டிய தேவையில்லை எனவும், தமது அமைப்பு தற்போது ஓர் அரசியல் கட்சி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"அரசாங்கமும், யுனிசெப் அமைப்பும் முன்னர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் அங்கம் வகித்த சிறுவர் போராளிகளுக்கு வெற்றிகரமாக புனர்வாழ்வளித்துள்ளன" என்றும் கருணா மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: