இலங்கைப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் வடக்கில் நடைபெறும் மோதல்களின் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில், மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதற்கும், மனிதாபிமான உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் அனுமதிக்கப்பட வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வேண்டுகோள்விடுத்தள்ளது.
இந்த மக்கள் தமது இடங்களிலிருந்து வெளியேறி, அடிப்படைத் தேவைகளை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறார்கள் எனக் குறிப்பிட்டிருக்கும் சர்வதேச மன்னிப்புச் சபையின் இலங்கை ஆய்வாளர் யொலான்டா போஸ்டர், "மக்களுக்கு சேதம் ஏற்படக்கூடிய வழிகளிலேயே விடுதலைப் புலிகள் அவர்களை வைத்திருக்கிறார்கள். அரசாங்கமோ அவர்களின் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்ய எதுவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை" எனவும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் விமானக் குண்டுவீச்சு மற்றும் ஷெல் தாக்குதல்களின் காரணமாக கடந்த மே மாதம் முதல் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலிருந்து 70,000 இற்கும் மேற்பட்ட மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறியிருப்பதாகவும் மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
இவ்வாறு இடம்பெயர்ந்தவர்களில் மூன்றில் ஒரு குடும்பத்தினர் கூடாரங்களின்றி திறந்த வெளியரங்கிலேயே தங்கியிருப்பதாகவும், பலர் உணவு, தற்காலிக கூடாரங்கள், மற்றும் எரிபொருள் என்பவற்றைப் பெற்றுக் கொள்ளமுடியாத நிலையிருப்பதாகவும் மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
ஓமந்தையூடாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு பொருட்களை எடுத்துச்செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் காரணமாகவே அங்கு நிவாரண உதவிகளை கொண்டு செல்வதில் தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும் சபை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கடைப்பிடிக்கப்படும் விசேட 'பாஸ்' நடைமுறையின் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை, படையினருடனான மோதலின் நடுவே பொதுமக்களை இடைநிறுத்தி வைத்திருப்பதானது சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மீறும் செயல் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் விடுதலைப் புலிகள் பலவந்த ஆட்சேர்ப்பில் ஈடுபட்டுவருவதாகவும் மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதேபோன்று, மன்னார் மாவட்டத்திலுள்ள களிமோட்டை முகாமிலிருக்கும் சுமார் 200 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் அனுமதியின்றி எந்தவொரு காரணத்திற்காகவும், அம்முகாம்களை விட்டு வெளியேற முடியாது என அரசாங்க பாதுகாப்புப் படையினரால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment