பெரும் வன்முறைச் சம்பவங்கள் ஏதுமின்றி "சார்க்' திருவிழா கொழும்பில் நடந்து முடிந்துவிட்டது.பாதுகாப்பு என்ற பெயரில் ஏகக் கெடுபிடி,நெருக்கடிகளைத் தலைநகரத்து மக்கள் சார்க்கின் பெயரால் அனுபவிக்க வேண்டியதாயிற்று.
சுமார் முந்நூறு கோடி ரூபாவுக்கு அதிகமான தொகையை சுளையாக விழுங்கி,ஏப்பம் விட்டதோடு ஒருவாரகால "சார்க்' ஆரவாரம் முடிவுக்கு வந்திருக்கின்றது."சார்க்' ஏற்பாடுகள் மற்றும் தடல்புடல் ஒழுங்குகளைப் பார்க்கும்போது உண்மைச் செலவினம் மேற்படி உத்தேசச் செலவினத்தைத் தாண்டி மேலும் பல கோடி ரூபாவை எட்டலாம் என்று கருதப்படுகின்றது.
"சார்க்'கின் பெயரால் வாரி இறைக்கப்பட்டு, வீண் விரயம் செய்யப்பட்ட நாட்டின் நிதி மற்றும் பொருளாதாரவளம் என்னவென்பது இனித்தான் மெல்ல மெல்ல அறிய தெரிய புரிய வரும் என்று எதிர்பார்க்கலாம்.கொழும்பு "சார்க்'கை ஒட்டி ஒருதலைப்பட்சமாகப் புலிகள் அறிவித்த யுத்தநிறுத்தம் பற்றிய பிரகடனத்தின் புண்ணியத்தால்,
ஏக பாதுகாப்புக் கெடுபிடிகள் இருந்த போதிலும்,மோசமான வன்முறைச் சம்பவங்கள் மற்றும் குழப்பங்கள் இன்றி "சார்க்' நடந்தேறியிருக்கின்றது. இதை நடத்தி முடித்த திருப்தியில் கொழும்பு அரசுத் தலைமைபெருமூச்சுவிட்டு ஆசுவாசப்படலாம்.
ஆனால் இனி என்னவென்பதுதான் இப்போது எழுந்துள்ள கேள்வியாகும். "சார்க்' மாநாட்டை ஒட்டிப் புலிகள் அறிவித்த ஒரு தலைப்பட்ச யுத்தநிறுத்த அறிவித்தலை நிராகரித்து உதாசீனம் செய்த கொழும்பு அரசுத்தலைமை,அந்த யுத்த நிறுத்த காலத்தில் இன்று வரையான பத்து நாள்களில் வன்னியில் பெரும் படை நகர்வு முயற்சிகளை முன்னெடுத்தது.
புலிகளின் நிலைகள் மீது வான் குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தியது.புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பல பிரதேசங்களைக் கைப்பற்றியதாகவும் அறிவித்தது.
ஆனால் புலிகளோ தாம் அறிவித்த இந்தப் பத்துநாள் யுத்த நிறுத்த காலத்தில் வன்னியில் அரசுப் படைகள் மேற் கொண்ட இராணுவ நடவடிக்கைகள் தொடர்பில் தற்காப்பு யுத்தம் ஒன்றையே பின்பற்றினர்.
அங்கும் கூட வலிந்து தாக்கும் நடவடிக்கை எதிலும் இக்காலப் பகுதியில் அவர்கள் தகவல்கள் ஏதுமில்லை. தமது யுத்த நிறுத்த அறிவித்தல் பிரகாரம் தென்னிலங்கையில் "சார்க்' காலத்தில் தாக்குதல் அல்லது வன்முறைச் சம்பவம் எதிலும் புலிகள் நெருக்கடிகள் இல்லாத ஒரு "சார்க்' மாநாட்டை பெயரளவுக்காவது இலங்கையினால் நடத்தி முடிக்க முடிந்தது.
அந்த யுத்த நிறுத்தம் இன்றோடு முடிவுக்கு வந்த பின்னர் இனி நிலைமை என்னாகும் என்பதே பலரினதும் கேள்வியாக இருக்கின்றது.
தாம் ஒருதலைப்பட்சமாக அறிவித்த யுத்தநிறுத்தத்துக்குப் பதிலாக,அரசுத் தரப்பு புலிகளின் அரசியல் தலைமைத்துவப் பணிமனை உள்ள கிளிநொச்சி மீதும் வலிந்த படை நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதால் அதற்கான தமது பதிலடிப் பிரதிபலிப்பை இன்றுடன் அந்த யுத்த நிறுத்தம் காலாவதியான பின்னர் புலிகள் வெளிப்படுத்துவர் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர்.
அதுவும்,புலிகளின் இந்த யுத்த நிறுத்த காலத்தில்தான் மன்னார் மாவட்டத்தை முழுமையாகப் புலிகளின் பிடியிலிருந்து விடுவித்தாயிற்று என்ற அறிவிப்பையும் கிளிநொச்சி மாவட்டத்தில் நீண்ட காலத்தின் பின்னர் முதற்றடவையாக நேரடியாகப் படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது என்ற விளக்கத்தையும் அரசுத் தரப்பின் பாதுகாப்பு வட்டாரங்கள் வெளிப்படுத்தியுமிருக்கின்றன.
மாவிலாறில் ஆரம்பித்த அரசுப்படைகளின் முன்நகர்வு பெரிய"பிரேக்' இல்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இவற்றுக்குப் புலிகளின் பதில் என்னவென்பதே வினா.பின்வாங்கி நகர்வதுதான் புலிகளிடம் உள்ள ஒரே மார்க்கம் என்று நையாண்டி செய்கின்றது தென்னிலங்கை.
எனினும்,இச்சமயத்தில் கடந்த வருடம் தமது மாவீரர் தின உரையில் பிரபாகரன் குறிப்பிட்ட கருத்தும் கவனிக்கத்தக்கது. ""எமது விடுதலை இயக்கத்தையும் விடுதலைப் போராட்டத்தையும் சிங்கள தேசம் எப்போதும் தவறாகப் புரிந்து கொள்கிறது.
குறைத்தே மதிப்பீடு செய்கிறது. பூகோள அமைப்பையும்,புறநிலை உண்மைகளையும் மிகவும்துல்லியமாகக் கணிப்பிட்டு,எதிரியின் பலத்தையும் பலவீனத்தையும் சரியாக எடை போட்டு, எதிர் விளைவுகளை மதிப்பீடுசெய்து,
இவற்றின் அடிப்படையிலேயே நாம் எமது போர்த்திட்டங்களைச் செயற்படுத்துகிறோம். எதிரியின் யுத்த நோக்குகளையும், உபாயங்களையும் முன்கூட்டியே தீர்க்கதரிசனமாக அனுமானித்தறிந்தே எமது போர்த் திட்டங்களை வகுக்கின்றோம்.
இப்படித்தான் கிழக்கிலும் எமது போர்த் திடடங்களை வகுத்தோம்.தற்காப்புத் தாக்குதல்களை நடத்தியவாறு தந்திரோபாயமாகப் பின் வாங்கினோம்.புலிகளின் தேசத்தில் அகலக்கால் நீட்டுவதும், நீட்டிய காலை நிலையாக வைத்திருப்பதும் எத்தனை ஆபத்தான விவகாரம் என்பதை சிங்களம் "ஜெயசிகுறு' சமரில் கற்றறிந்திருக்கலாம்.
ஆனால் சிங்கள இராணுவம் நாம் விரித்த வலைக்குள் வகையாக விழுந்து பெருந்தொகையில் படையினரை முடக்கி,ஆளில்லாப் பிரதேசங்களை இன்று ஆட்சி புரிகிறது.நில அபகரிப்பு என்ற பொறியில் சிங்களம் மீளவும் விழுந்திருக்கிறது.
இதன் பார தூரமான விளைவுகளை அது விரைவில் சந்தித்தே ஆகவேண்டிவரும்.'' என்று பிரபாகரன் அப்போது குறிப்பிட்டிருந்தார். இதனைக் கருத்தில் எடுக்கும்போது, களநிலைமை என்னவாகும் என்ற கேள்விக்குக் காலம்தான் பதில்சொல்லும் என்று பலரும் கருதுகின்றனர்.
Monday, 4 August 2008
சார்க் திருவிழாவும் முடிந்தது! யுத்த நிறுத்தமும் முடிந்தது! இனி என்ன?
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment