தெஹிவளை வாசல வீதியில் உள்ள உணவகம் ஒன்றிற்கு சென்றுஇ உணவக உரிமையாளரின் தலையில் துப்பாக்கி வைத்து அச்சுறுத்திஇ 11 ஆயிரத்து 500 ரூபாவை கொள்ளையிட்டமை மற்றும் உணவகத்தின் உடமைகளுக்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் அமைச்சரவை பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த இரண்டு காவற்துறை அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொதுமக்களிடமிருந்து அச்சுறுத்திப் பெறப்பட்ட பணத்தை வைத்திருந்தமை, பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரிகள் எனத் தம்மைக் கூறி கடத்தல்களில் ஈடுபட முயற்சித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின்பேரில், இரு அமைச்சரவைப் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகளை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட இரு பாதுகாப்பு அதிகாரிகளும், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் ஆகியோருக்கு பாதுகாப்பு வழங்குபவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
இவர்களில் ஒருவர் சார்ஜன்ட் எனவும், மற்றயவர் கான்ஸ்டபிள் எனவும் தெரிவிக்கப்படுவதுடன், இவர்களுடன் மேலும் மூவரும் சம்பந்தப்பட்டிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேற்படி குழுவினர், கடந்த வெள்ளிக்கிழமை தெஹிவளையிலுள்ள தனியார் உணவகம் ஒன்றுக்குச் சென்று அதன் உரிமையாளரிடம் பணம் பெற முயற்சித்துள்ளபோதே குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வியாழக்கிழமை குறித்த உணவகத்தின் தொழிலாளர் ஒருவரிடமிருந்து 11,000 ரூபா பணத்தினை இந்தக் குழுவினர் பறிமுதல் செய்ததாகவும் உணவகத்தின் உரிமையாளர் குற்றம்சாட்டியுள்ளார்.
இச்சம்பவத்தை நேரில் அவதானித்த கடற்படை அதிகாரி ஒருவர் இது குறித்து பொலிசாருக்கு அறிவித்ததாகவும், உடனடியாக அவ்விடத்துக்கு வந்த பொலிசார் இந்தக் குழுவினரை அவர்களது வெள்ளை வானுடன் கைது செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், இந்த இரு பாதுகாப்பு அதிகாரிகளும் சம்பவம் இடம்பெற்ற சமயம் விடுமுறையில் சென்றிருந்ததாக ஐக்கிய தேசிக் கட்சி தெரிவித்துள்ளது.
தனது பாதுகாப்பு அதிகாரி தற்போது கைதுசெய்யப்பட்டிருப்பதை பாராளுமன்ற உறுப்பினர் காரியவசம் உறுதிப்படுத்தியுள்ளதுடன், இச்சம்பவத்துக்கும் தமது கட்சிக்கும் எந்தவித தொடர்புமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த சந்தேக நபர்கள் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தியிருக்கும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.
இதேவேளை, இதுகுறித்து கருத்து வெளியிட்டிருக்கும் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, "எதிர்க்கட்சித் தலைவருடன் தொடர்புடைய இரு பொலிஸ் அதிகாரிகள் கடத்தல் மற்றும் கப்பம் வாங்கிய குற்றச்சாட்டின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் கடந்த காலங்களில் ஈடுபட்ட குற்றச்செயல்கள் தொடர்பாகவும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், சில பொலிஸ் அதிகாரிகளைப் பயன்படுத்தி எதிர்க்கட்சியினர் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சித்திருக்கின்றமை தெரியவரும். இவர்களுக்கு வெளியிலுள்ள சில சக்திகளும் ஆதரவு வழங்கியுள்ளன" என தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment