Monday, 4 August 2008

ஆசிய பாராளுமன்றம் உருவாக்கப்படவேண்டும்- ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஆலோசனை

சர்வதேச ரீதியில் மேலும் பலமான பங்களிப்பை வழங்கும் நோக்கில் ஆசிய பாராளுமன்றமொன்று அமைக்கப்படவேண்டும் என ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

“சர்வதேச ரீதியில் முக்கிய பங்கினைச் செலுத்தும் வகையில் ஆசியான், சார்க் மற்றும் பொருளாதார கூட்டுறவு அமைப்பு ஆகியன இணைந்து ஆசிய பாராளுமன்றமொன்றை உருவாக்கி செயற்படவேண்டும்” என சார்க் மாநாட்டில் பார்வையாளராகக் கலந்துகொண்டிருந்த ஈரான் வெளிவிவகார அமைச்சர் மொனொச்சர் மொட்டாக்கி ஊடகவியலாளர்களிடம் கூறினார்.

சார்க் உறுப்பு நாடுகளுக்கும், தெஹ்ரானுக்கும் இடையிலான பொருளாதார அரசியல் உறவுகளை எதிர்காலத்தில் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

ஈரானிய கம்பனிகள் பல இலங்கையில் பல்வேறு அவிருத்திப் பணிகளில் ஈடுபட்டுள்ளமையானது, ஈரானுக்கும், கொழும்புக்கும் இடையிலான நல்லுறவை மேலும் பலப்படுத்தும் என ஈரானிய வெளிவிவகார அமைச்சர் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் குறிப்பிட்டார்.

இலங்கையில் நடைபெற்று முடிந்த 15வது சார்க் உச்சிமாநாட்டில் சீனா, ஈரான், அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான், மொறிசியஸ் ஆகிய நாடுகள் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டிருந்தன.

ஈரான் ஜனாதிபதி மஹமூட் அஹமது நிஜாட் இந்த வருடம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்ததுடன், பல்வேறு அபிவிருத்திப் பணிகளுக்கு உதவிகளை வழங்குவதாக உறுதியளித்துச் சென்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments: