Saturday, 9 August 2008

"சார்க்” மாநாட்டுக்காக இறக்குமதி செய்யப்பட்ட குண்டு துளைக்காத வாகனங்களுக்காக இலங்கை அமைச்சர்கள் பூனை சண்டை

சார்க்” மாநாட்டுக்காக இறக்குமதி செய்யப்பட்ட குண்டு துளைக்காத வாகனங்களுக்காக அமைச்சர்கள் மத்தியில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கடந்த ஆகஸ்ட் 2 ஆம் 3 ஆம் திகதிகளில் கொழும்பில் இடம்பெற்ற “சார்க்” மாநாட்டுக்காக 31 குண்டுதுளைக்காத கார்களும் 100 ஜீப் வாகனங்களும் இறக்குமதி செய்யப்பட்டன.


இந்தநிலையில் பல அமைச்சர்கள், குண்டுதுளைக்காத கார்களைப் பெற்றுக் கொள்வதற்காக, உயர் காவல்துறை அதிகாரிகளிடம் தமது பெயர்களையும் புலனாய்வுத் தகவல்களில் அச்சுறுத்தல் இருப்பதாகக் காட்டும் வகையில் சேர்த்துக்கொள்ளுமாறு கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் உள்ள அமைச்சர்களுக்கே குண்டு துளைக்காத கார்கள் வழங்கப்படவேண்டும் என ஜனாதிபதி உத்தரவிட்டமை காரணமாகவே இந்த உத்தியை அமைச்சர்கள் கையாண்டுள்ளனர்.


புலனாய்வுத் தரப்பினரின் தகவல்படி 25 அமைச்சர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன் இந்தக் கார்களில் ஒன்று, ஜே என் பியின் தலைவர் விமல் வீரவன்ச மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கும் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன் அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன, நிமல் சிறிபால டி சில்வா, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, மஹிந்த சமரசிங்க, ரிசாட் பதியுதீன் மற்றும் மிலிந்த மொரகொட ஆகியோருக்கும் இந்தக் கார்கள் வழங்கப்படவுள்ளன.


“சார்க்” மாநாட்டுக்காக இந்தியாவில் இருந்தும் ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி மற்றும் செக் மக்கள் குடியரசு ஆகிய நாடுகளில் இருந்தும் இந்தக் கார்கள் இறக்குமதி செய்யப்பட்டன.


இதில் 12 கார்கள் 1.8 மில்லியன் டொலர்களுக்கும், 15 கார்கள், 3.7 மில்லியன் டொலர்களுக்கும் ஏனைய 4 கார்கள்,13.23 மில்லியன் டொலர்களுக்கும் இறக்குமதி செய்யப்பட்டன.

No comments: