Monday, 11 August 2008

அரசியல் வேலைத்திட்டத்தை கொழும்புக்கும் வன்னிக்கும் விஸ்தரிக்கவுள்ளோம்-கருணா அம்மான்

தமது கட்சியின் அரசியல் வேலைத்திட்டங்களை கொழும்புக்கும், வன்னிக்கும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.


"கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் கொழும்பில் இருப்பதன் காரணமாக அங்கும் எமது அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம். அதேநேரம், எமது அரசியல் வேலைத்திட்டத்தை வன்னிக்கும் விஸ்தரிக்கவுள்ளோம்" என்றும் கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஏனைய அரசியல் கட்சிகளுடன் தான் ஏற்கனவே நெருக்கமான உறவுகளைப் பேணி வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், புதிய நிருவாகக் கட்டமைப்பின்கீழ் அதனை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்ற கட்சியின் கூட்டத்தில், அரசியல் ரீதியான சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில், கட்சியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை கட்சியின் தேசிய அமைப்பாளராக நியமிப்பதற்கு கட்சியின் அரசியல்பீடம் முடிவுசெய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், கிழக்கு மாகாணசபை உறுப்பினரான பிரதீப் மாஸ்டர் என்றழைக்கப்படும் எட்வின் கிரிஷ்ணானந்தராஜா கட்சியின் செயலாளராகவும், ஜெயம் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகர மேயர் சிவகீதா பிரபாகரன், கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராகவும், பாரதி அம்பாறை மாவட்ட அமைப்பாளராகவும், மார்க்கன் திருகோணமலை மாவட்ட அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் வடமத்திய மாகாண சபைத் தேர்தலில் மங்களன் மாஸ்டர், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதாகவும், அவர் பொலனறுவை மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்படவுள்ளதாகவும் கருணா தெரிவித்துள்ளார்.

தமது கட்சியின் உறுப்பினர்கள், கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் தொடர்பாக கடந்த சில மாதங்களாக மதிப்பீடுகளை மேற்கொண்டுவருவதாகக் குறிப்பிட்ட அவர், மாகாணத்தின் அபிவிருத்திக்காக அரசாங்கத்திடம் நிதியுதவியைக் கோருவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments: