ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை விவகாரங்களுக்கான முன்னாள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பர், தனது பதவிக்காலத்தின் போது, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அதிகளவில் கவனம் செலுத்தத் தவறியிருப்பதாக ஐக்கிய நாடுகள் ஆலோசனைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
லூயிஸ் ஆர்பரின் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட அனைத்து அறிக்கைகளையும் பரிசீலித்திருக்கும் ஐ.நா. கண்காணிப்பகம், 39 நாடுகளில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆர்பரின் அறிக்கைகளில் பெருமளவில் விமர்சிக்கப்பட்டிருந்ததாகக் கூறியுள்ளது.
“இவற்றில் பெரும்பாலானவை ஆட்சியிலிருக்கும் நாடுகளால் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் குறைவாக மதிக்கப்படுபவை தொடர்பானவை. இதில் இலங்கை, மியன்மார், பாகிஸ்தான், சூடான், சிம்பாபே ஆகிய நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. லூயிஸ் ஆர்பரால் விமர்சிக்கப்பட்ட 79 நாடுகளில் 10 மாத்திரமே திருத்திக்கொள்ள முன்வந்தன” என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
லூயிஸ் ஆர்பர் பதவியிலிருக்கும் போது மியன்மாரை 7 தடவைகளும், ஆப்கானிஸ்தானை 4 தடவைகளும், ஈரான், இஸ்ரேல் மற்றும் பாகிஸ்தானை 4 தடவைகளும், இலங்கையை இரண்டு தடவைகளும் விமர்சித்திருந்ததாக ஐக்கிய நாடுகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகள் தொடர்பாக பிழையான நிலைப்பாட்டை லூயிஸ் ஆர்பர் எடுத்திருந்ததாகவும், ஐக்கிய நாடுகள் சபையில் ஆதிக்கம் செலுத்தும் சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து நிரூபிப்பதற்குப் போதியளவு தரவுகளை பெற்றுக்கொள்ள அவரால் முடியவில்லையெனவும் அந்தக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலேயே முன்னாள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பரின் அறிக்கைகளைப் பரிசீலித்திருப்பதாக ஐக்கிய நாடுகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.
லூயிஸ் ஆர்பரின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளராக தென்னாபிரிக்காவைச் சேர்ந்த நவநீதம்பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment