Saturday, 2 August 2008

பயங்கரவாதத்தில் நல்ல பயங்கரவாதம், மோசமான பயங்கரவாதம் என்ற பிரிவுகள் இல்லை- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

பயங்கரவாதத்தில் நல்ல பயங்கரவாதம், மோசமான பயங்கரவாதம் என்ற பிரிவுகள் இல்லையென இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 15வது சார்க் உச்சிமாநாட்டில் தெரிவித்தார். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு பிராந்திய நாடுகள் வழங்கிவரும் ஒத்துழைப்புக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

கொழும்பில் இன்று சனிக்கிழமை ஆரம்பமான 15வது சார்க் உச்சி மாநாட்டின் தலைமைப் பதவி இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டது. இதுவரை காலமும் சார்க் நாடுகளின் தலைமைப் பதவியை வகித்துவந்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், 15வது சார்க் மாநாட்டுக்கான தலைமைப் பதவியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தார்.

இதன் பின்னர் அங்கு உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகள் தொடர்பாகச் சுட்டிக்காட்டியிருந்தார். பிராந்தியத்தில் சமாதானத்தையும், பாதுகாப்பையும் வலுப்படுத்துவதற்கு இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது அவசியம் எனக் குறிப்பிட்ட அவர், தெற்காசிய நாடுகளுக்கு பயங்கரவாதம் ஒரு சாபக்கேடாக அமைந்துள்ளதுடன், அமைதிக்கு அச்சுறுத்தலாகவும் அமைந்துள்ளது எனக் கூறினார்.

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்குப் பிராந்திய நாடுகள் வழங்கிவரும் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்புத் தொடர்பாக ஆராய்வது முக்கியமானது என வலியுறுத்தியிருந்தார்.

இலங்கையின் கிழக்கு மாகாணத்திலிருந்து பயங்கரவாதத்தை இல்லாதொழித்து தற்பொழுது அங்கு ஜனநாயகத்தை அமுல்படுத்தியிருப்பதாகவும், பயங்கரவாதத்தில் ஈடுபட்டவர்கள் ஜனநாயகச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். முன்னாள் சிறுவர் போராளியாகவிருந்தவர் தற்பொழுது கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷ, இதேபோன்று வடக்கையும் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டு அங்குள்ள மக்களும் ஜனநாயகத்தை அனுபவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.

ஆசியாவின் பொருளாதாரமே உலகின் பலமாக உள்ள பொருளாதாரம் எனத் தனது உரையில் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, உணவுப் பாதுகாப்பு, சமூக முயற்சிகள் என்பனவே பொருளாதாரத்தைப் பலமாக வைத்திருப்பதற்கு உதவியதாகவும், இந்த ஸ்திரமான நிலைமை தொடர்ந்தும் பேணப்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன், சார்க் பிராந்திய நாடுகளுக்கிடையில் சக்தி எரிபொருள், தொலைத்தொடர்பு போன்ற விடயங்களில் இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டு, அவற்றைப் பிராந்திய நாடுகளுக்கிடையில் பகிர்ந்துகொள்ளவேண்டும் என ஆலோசனை முன்வைப்பதாகவும் அங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

No comments: