Tuesday, 12 August 2008

விடுதலைப் புலிகளே உலகத்தில் அதிக கூடிய வருமானங்களைப் பெறும் இரண்டாவது போராளிக்குழு- ஜேன்ஸ் புலனாய்வு சஞ்சிகை தகவல்

உலகத்திலேயே இரண்டாவது அதிக கூடுதலான வருமானம் பெறும் பயங்கரவாத அமைப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு விளங்குவதாக ஜேன்ஸ் புலனாய்வு சஞ்சிகையின் ஓகஸ்ட் மாத இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் சட்ட ரீதியான மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் வருடாந்தம் 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதல் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாகப் பெறுவதாக அந்த சஞ்சிகை கூறுகிறது.

கப்பல்கள் மூலம் போதைப் பொருள்களைக் கடத்தல் மற்றும் ஏனைய நாடுகளில் இருப்பவர்களை மிரட்டிப் பணம் சேகரித்தல் போன்றவற்றின் மூலமே கூடுதலான நிதியை விடுதலைப் புலிகள் திரட்டிக்கொள்வதாகவும், கொலம்பிய புரட்சிகர இராணுவத்திற்கு அடுத்ததாக விடுதலைப் புலிகள் அமைப்பே கூடுதலான வருமானத்தை ஈட்டுவதாக ஜேன்ஸ் சஞ்சிகை குறிப்பிடுகிறது.

“தோள்களில் வைத்துத் தாக்கும் விமான எதிர்ப்புப் பீரங்கிகளே கடத்தல் பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்றன. அதேநேரம் சிறிய ரக ஆயுதங்களும் அவர்களால் கடத்தப்படுகின்றன” என்று ஜேன்ஸ் சஞ்சிகையின் முகாமைத்துவ ஆசிரியர் கிரிஸ்ரின்.லி.மிய்ரி தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் அமைக்கப்பட்டிருக்கும் பல்வேறு தமிழ் அறக்கட்டளை நிலையங்கள் மூலமும் விடுதலைப் புலிகள் வருமானங்களைத் திரட்டிக்கொள்வதாக ஜேன்ஸ் சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் தென்கிழக்காசிய நாடுகள் மற்றும் அயல் நாடான இந்தியாவிலிருந்து ஆயுதங்களைக் கடத்தியிருப்பதாகவும், 2006ஆம் ஆண்டு முதல் இடம்பெற்றுவரும் மோதல்களால் அவர்கள் பலமிழந்து செல்வதாகவும் அந்தச் சஞ்சிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: