வன்னியில் இடம்பெயர்ந்திருக்கும் மக்களுக்கான மனிதநேயப் பணிகளை முன்னெடுப்பதற்கான சூழ்நிலை தொடர்ந்தும் மோசமடைவதாக நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இடம்பெயர்ந்திருக்கும் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு விடுதலைப் புலிகளும், இலங்கை அரசாங்கமும் மதிப்பளிக்க வேண்டும் என அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
‘மோதல் சட்டம்’ இலங்கை அரசாங்கத்தாலும், விடுதலைப் புலிகளாலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்திருக்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சட்ட மற்றும் கொள்ளைப் பணிப்பாளர் ஜோம்ஸ் ரோஸ், முன்னரங்கப் பகுதிகளில் ஆபத்தில் இருக்கும் மக்களுக்கான உதவிப் பொருள்கள் தடையின்றி செல்வதை இரண்டு தரப்பும் உறுதிப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
“வடபகுதியில் அண்மைக் காலமாக இடம்பெற்றுவரும் மோதல்களால் ஆயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்திருப்பதாக அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அந்தப் பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் சுதந்திரமாக நடமாடமுடியாதுள்ளனர். அவர்களுக்கு உடனடியாகத் தேவைப்படும் மனிதநேய உதவிகள் கிடைக்கப்பெறவில்லை” என ரோஸ் கூறினார்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள ஆயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்திருப்பதாக மனிதநேய அமைப்புக்களின் அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாகவும், அவ்வாறு இடம்பெயர்ந்திருக்கும் மக்களுக்குப் போதியளவு உதவிகள் வழங்கப்படுவதில்லையென்பதுடன், அவர்கள் மரங்களின் கீழ் தங்கியிருப்பதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
“இவ்வாறு இடம்பெயர்ந்திருக்கும் ஆயிரக்கணக்கானவர்கள் குறித்து நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம். இடம்பெயர்ந்தவர்களுக்குத் தேவையான உடனடி உதவிகளை வழங்குவதற்கு விடுதலைப் புலிகளும், இலங்கை அரசாங்கமும் முன்னுரிமை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றோம். இடம்பெயர்ந்திருக்கும் மக்களின் நிலைமை மிகவும் மோசமடையாமல் தடுக்கப்படவேண்டும். மோதல் சட்டங்களுக்கு அமைய ஆபத்தில் இருக்கும் பொதுமக்களுக்கான உதவிகளை வழங்குவது அரசாங்கத்தினதும், விடுதலைப் புலிகளினதும் கடமை” என ஜோம்ஸ் ரோஸ் கூறியுள்ளார்.
இதேவேளை, வன்னிப் பகுதியில் இடம்பெயர்ந்திருக்கும் மக்கள் தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளும் கவனம் செலுத்தியுள்ளனர்.
“வன்னியிலிருக்கும் மக்கள் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வன்னியைக் கைப்பற்றும் இராணுவ நடவடிக்கைகளை அவர்கள் வரவேற்கின்றனர். எனவே, மக்களின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்தவேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுக்கின்றோம்” என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பேச்சாளர் ஆசாத் மௌலானா கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.

No comments:
Post a Comment