பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்று முடிவடைந்திருக்கும் 15வது சார்க் உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட உள்ளூர் அரசியல் பிரமுர்களுக்கு அரசாங்கம் சரியான முறையில் ஆசனங்களை ஒதுக்கவில்லையென பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோருக்கு சரியான முறையில் ஆசனங்களை ஒதுக்க அரசாங்கம் தவறிவிட்டதாகவும், அவர்களுக்கு முன்வரிசை ஆசனங்களில் இடம் ஒதுக்கப்பட்டிருக்கவில்லையெனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் கூறினார்.
ரணில் விக்ரமசிங்கவுக்கு 4ஆம் வரிசையில் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டமையானது அவருக்குரிய இராஜதந்திர மரியாதையைச் செலுத்த அரசாங்கம் தவறியிருப்பதை வெளிக்காட்டியிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அவ்வாறு உரிய மரியாதை வழங்காவிட்டால் எதிர்காலத்தில் அரசாங்கத்தின் எந்தவித நிகழ்வுகளிலும் கலந்துகொள்வதைத் தவிர்க்கப்போவதாகத் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகல்லாகம, கடந்த 1996ஆம் ஆண்டு தயாரித்த பிரகடனத்துக்கு அமையவே சார்க் மாநாட்டில் கலந்துகொள்பவர்களுக்கான ஆசனங்கள் ஒதுக்கப்படும் எனக் கூறினார். அதன்படி ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், நீதியரசர், அமைச்சரவை அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் என்ற ஒழுங்கிலேயே ஆசனங்கள் ஒதுக்கப்படும் எனவும், அமைச்சரவையில் 50 அமைச்சர்கள் வருகைதந்திருந்ததால் நான்காவது வரிசையிலேயே எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆசனம் ஒதுக்கவேண்டி ஏற்பட்டதாகவும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தனக்கு உரிய ஆசனம் ஒதுக்காமையால் தான் சங்கடத்துக்குள்ளானதாகக் கூறினார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் ஆசனம் இன்றி அங்கும் இங்கும் ஆசனம் தேடி அலைந்ததாகவும் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

No comments:
Post a Comment