Tuesday, 12 August 2008

கொழும்புத் துறைமுகத்துக்குப் போட்டியாக தென்னிந்தியாவில் துறைமுகம் அமைக்கத் திட்டம்

இந்தியாவிலிருந்து வரும் சரக்குக் கப்பல்களின், கப்பலிலிருந்து கப்பலுக்கு சரக்குகளை மாற்றும் செயற்பாட்டில் 70 வீதமானவை கொழும்புத் துறைமுகத்திலேயே நடைபெறுவதன் காரணமாக, தென்னிந்திய துறைமுகங்கள் இந்த சந்தையைக் கைப்பற்றுவதற்கு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்பொருட்டு, தென்னிந்தியாவிலுள்ள மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரையில் சுமார் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிடுவதன் மூலம், அப்பிரதேசத்தை முக்கிய கடற்போக்குவரத்து மையமாக மாற்றுவதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளதாகவும், இதன்மூலம் மிகக் குறுகிய காலத்தில் இலங்கையுடன் போட்டியிடக்கூடியதாகவிருக்கும் எனவும் இந்திய கப்பல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தமிழ்நாட்டிலுள்ள, சென்னை, ஈனோர், தூத்துக்குடியிருப்பு, கொலாச்சல் ஆகிய துறைமுகங்களில் மேலும் பலவசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கப்பல் சரக்குகள் பரிமாற்றம் நடைபெறும் கொழும்புசந்தையைக் கைப்பற்றுவதற்கு இதுவே சிறந்த சந்தர்ப்பம் எனத் தாம் கருதுவதாகவும் இந்திய கப்பல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கப்பல் சரக்குப் பரிமாற்றத்திற்கேற்ற துறைமுக வசதி இல்லாததன் காரணமாக, இந்திய கப்பல் உரிமையாளர்கள் மேலதிகமாக 150 டொலர்களை கொழும்புத் துறைமுகத்துக்குச் செலுத்த வேண்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

"கொழும்புத் துறைமுகத்துக்கு மாற்றீடாக, இந்திய துறைமுகம் ஒன்றை அபிவிருத்தி செய்வது குறித்து அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்" எனவும் இந்திய கப்பல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பூகோள ரீதியில், இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் மிக முக்கியமான துறைமுகமாக கொழும்புத் துறைமுகம் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: