Monday, 14 April 2008

ஜனாதிபதி மஹிந்தவின் அரசாங்கம் யுத்தமல்ல; வெறும் சத்தமே போடுகின்றது -ரவி கருணாநாயக்க

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் யுத்தம் அல்ல; வெறும் சத்தமே போடுகிறது. படையினரின் அர்ப்பணிப்பினை தனது இருப்புக்காக அரசாங்கம் பயன்படுத்துகின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். ஜே. வி.பி. யின் ""தேசப்பற்று'' என்ற மக்களை ஏமாற்றும் வேஷம் கலைந்து உண்மையில் ""தேசத் துரோகிகள்'' யார் என்பது மக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் தற்போதைய நிலை குறித்து கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, எமது படையினர் நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர். ஆனால் அரசாங்கம், அந்த அர்ப்பணிப்பை தனது இருப்புக்காகவும் அரசியல் லாபத்துக்காகவும் பயன்படுத்துகிறது.

யுத்தமல்ல, வெறும் சத்தத்தையே அரசாங்கத் தரப்பு வெளியிடுகிறது. அரசாங்கத்தின் யுத்தத்தின் சத்தம் தொடர்பாக ஐ.தே.க. வின் நிலைப்பாடு மிக விரைவில் செயற்குழுவை கூட்டித் தீர்மானிக்கப்படும். தேசப்பற்றாளர் என்ற ஜே.வி.பி. யினர் போர்த்தியிருந்த செம்மறி ஆட்டுத் தோல் விலகி அக்கட்சியினது தேசத் துரோகமென்ற நிர்வாணம் மக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் அமைதியை ஏற்படுத்தி பொருளாதாரத்தை உயர்த்த அன்று ஐ.தே.க. முன்னெடுத்த திட்டங்களை தேசத் துரோகத்தனமானதென குற்றம் சுமத்திய ஜே.வி.பி. இன்று பிளவுபட்டுள்ளது. எனவே இன்றாவது எமது மக்கள் தேசப் பற்றாளர்கள் யார்? தேசத் துரோகிகள் யாரென்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஐ.தே.க. இந்நாட்டின் மீது உண்மையான பற்று கொண்ட தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களையும் ஒன்றிணைக்கக் கூடிய கட்சியாகும்.

வேறெந்த அரசியல் கட்சிக்கும் இனங்களை மதங்களை ஐக்கிய மயப்படுத்தும் வல்லமை கிடையாது. யுத்தமோ, உலகச் சந்தையின் விலையேற்றங்களோ நாட்டில் தினம் தினம் விலைவாசிகள் உயரக் காரணமென்பதை ஏறறுக் கொள்ள முடியாது. இது மக்களை ஏமாற்றும் யுக்தியாகும்.

கோழி முட்டை, தேங்காய் எல்லாம் உலகச் சந்தையிலிருந்தா இறக்குமதி செய்யப்படுகின்றது? இல்லை. இவையெல்லாம் உள்ளூர் உற்பத்திகள் இவற்றின் விலைகளும் அதிகரித்துள்ளன. இதற்கு காரணம் அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் நிறைந்த நிர்வாகச் சீர்கேடே ஆகும்

1 comment:

ttpian said...

not only kozy muttai,MONEY is also imported from other countries!
Mahindha has not spared a country in the world map:He has carried the very BIG BEGGAR BOWL to get funds!
what a shame?
NALLATHAMBI