Wednesday, 21 May 2008

புலிகளுக்கு ஆதரவாக மேற்குலக நாடுகள் செயற்படுகின்றன: மகிந்த சமரசிங்க குற்றச்சாட்டு


தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக மேற்குலக இராஜதந்திரிகள் செயற்படுகின்றனர் என்று சிறிலங்காவின் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுவில் அங்கத்துவம் பெறுவதற்கான வாக்கெடுப்பு நியூயோர்க்கில் இன்று புதன்கிழமை இரவு நடைபெறவிருக்கின்றது.

இந்நிலையில் கொழும்பில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மகிந்த சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கையில் உள்ள மனித உரிமைகள் நிலவரம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்திற்கு ஏற்கனவே அறிவித்துள்ளோம்.

இலங்கையில் உள்ள மனித உரிமை நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புக்களுடன் நடத்திய கலந்துரையாடல்களின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை அமைந்திருந்தது.

எமது இந்த அறிக்கை குறித்து மேற்குலக நாடுகளின் பிரதிநிதிகள் பல்வேறு கேள்விகளை எம்மிடம் எழுப்பினர். அதற்கெல்லாம் சரியான பதில்களை வழங்கினோம். அத்துடன் அனைத்துலக சமூகத்திடம் ஆலோசனைகள் பெற்றுக்கொண்டு வருவதாகவும் கூறினோம்.

நாம் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பாக ஆராய்வதற்கு மூன்று மணித்தியாலங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. ஆனால் ஏனைய அங்கத்துவ நாடுகளுக்கு கூடுதலான நேரம் ஒதுக்கப்பட்டது. அந்த நேரத்தில் இலங்கை மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கமளித்தோம். கடத்தல் கப்பம் மற்றும் சிறார்களைப் படையில் சேர்த்தல் போன்ற மனித உரிமை மீறல்களை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்தோம்.

அரச தலைவரால் நியமிக்கப்ட்ட அனைத்துலக மாண்புமிக்கோர் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தோம். எனினும் சில நாடுகள் சிறிலங்கா மீது சேறு பூசும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும் இன்றைய நாள் நடைபெறும் வாக்கெடுப்பில் பெரும்பான்மையான வாக்குகள் சிறிலங்காவுக்கு கிடைக்கும் என நம்புகிறோம்.

தென்னாபிரிக்க ஆயர் டெஸ்மன் டுட்டு மற்றும் அமெரிக்க முன்னாள் அரச தலைவர் ஜிம்மி காட்டர் ஆகியோர் சிறிலங்காவுக்கு எதிராக வாக்களிக்குமாறு பல்வேறு நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இவர்கள் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படுகின்றனர் என்றார் அவர்.

No comments: