Monday, 19 May 2008

கைக்குண்டுத் தாக்குதலையடுத்து மன்னாரில் தீவிர தேடுதல்

மன்னார் புகையிரத நிலைய வீதியில் அமைந்திருக்கும் இராணுவக் காவலரன் மீது இன்று அதிகாலை 1.30 மணியளவில் கைக்குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும், தாக்குதலையடுத்து அதிகாலை 4.30 மணி முதல் படையினர் பாரிய சுற்றிவளைப்புத் தேடுதலில் ஈடுபட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரவிக்கின்றன.

இந்தத் தேடுதல் நடவடிக்கையின் போது, மன்னார் சாந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பொது இடங்களுக்கு அழைத்துவரப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தடுத்துவைக்கப்பட்டுள்ள பொது மக்களை முகமூடி அணிந்த இராணுவத்தினர் சோதனைக்குட்படுத்தி வருவதாகவும், அனைவரது முகங்களையும் படையினர் ஒளிப்பதிவு செய்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சோதனை நடவடிக்கைகளுக்காக பொது மக்களை ஒளிப்பதிவு செய்வதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ள போதிலும், படையினர் இன்று மன்னாரில் ஒளிப்பதிவில் ஈடுபட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

பொதுமக்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள இடத்திற்கு, செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டதோடு அங்கிருந்து திருப்பியனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, வவுனியாவில் நேற்று மாலை ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதோடு, நேற்றிரவு 10.30 மணியளவில் புத்தல பகுதியில் நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஊர்காவல் படைவீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

No comments: