Sunday, 18 May 2008

கிழக்கில் சிங்களவர் உரிமை பாதிக்கப்பட்டால் உயிர்த்தியாகம் செய்வோம். - எல்லாவள மேதானந்த தேரர்

கிழக்கு மண் தமிழருக்கு உரியதோ முஸ்லிம்களுக்கு உரியதோ அல்ல. இந்த நாடு சிங்களவருக்கு மட்டுமே உரியது.

கிழக்கு சிங்களவருடையதே. கிழக்கில் சிங்களவரின் உரிமை பறிக்கப்படுமானால் உரிமைக்காக உயிரைத் தியாகம் செய்யவும் நாம் தயார் என ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் சங்கைக்குரிய எல்லாவள மோதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது. திகவாபிக்கு 12,000 ஏக்கர் காணி இருந்தது. இதை 560 ஏக்கர் காணியாக குறைத்தார் அஸ்ரப். அதற்கு எதிராக அப்போது நாம் எதிர்ப்பு நடவடிக்கைகளை எடுத்தோம்.

இப்போது அவரது மனைவி பேரியல் அஸ்ரப் வீடமைப்பு திட்டமொன்றை உருவாக்கி முஸ்லிம்களுக்கு மேலும் காணிகளை பகிர்ந்தளிக்க ஏற்பாடு செய்துள்ளார்.

ஒரு பௌத்த புண்ணியத்தலத்துக்கு அருகே முஸ்லிம்களை குடியமர்த்துவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இதை எதிர்த்தே நாங்கள் வழக்கு தாக்கல் செய்துள்ளோம்.

ஒரு முஸ்லிம் பள்ளிவாசலுக்கு அருகே அல்லது இந்துக் கோவிலுக்கு அருகே சிங்களவர்களை குடியேற்றினால் சும்மா இருப்பார்களா? அதே போன்று தான் திகவாபி பௌத்தர்களுக்கு மிக முக்கியமான பிரதேசமாகும். எமது புத்தர் காலடிபட்ட மண். இதை விட்டுக்கொடுக்க நாங்கள் தயார் இல்லை.

கிழக்கில் முதலாமைச்சர் யார் என போட்டி போட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். பிள்ளையான் முதலமைச்சரானாலும் சரி. ஹிஸ்புல்லா முதலமைச்சரானாலும் சரி கிழக்கில் சிங்களவரின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். இன விகிதாசாரத்தின் அடிப்படையில் சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட சிங்கள மக்களை மீண்டும் அங்கு குடியமர்த்த வேண்டும் சிங்களவரிடம் இருந்து பறிக்கப்பட்ட காணிகள் மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

இந்த நடவடிக்கைகளை பதவிக்கு வருகின்ற முதலமைச்சர் மேற்கொள்ளாவிடின் அவருக்கு எதிராக ஜாதிக ஹெலஉறுமய நடவடிக்கை எடுக்கும்.

No comments: