Tuesday, 10 June 2008

பிள்ளையான் குழு நிராயுதபாணிகளாக்கப் படாவிட்டால் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்

கிழக்கு மாகாணத்தில் அடாவடித்தனங்களில் ஈடுபட்டுள்ள பிள்ளையான் குழு நிராயுதபாணிகளாக்கப் படாவிட்டால் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என முஸ்லிம் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது.


கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இம்முன்னணியின் பொதுச் செயலாளர் எம்.ஐ.எம்.காதர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.


காத்தான்குடி பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் கொலைகள் பிள்ளையான் குழுவினராலேயே செய்யப்பட்டு வருவதாகவும், இந்தக் கொலைகள் அச்சுறுத்தல்கள் உட்பட காத்தான்குடியில் இடம்பெற்ற அனைத்துச் சம்பவங்களுடனும் பிள்ளையான் குழுவுக்குத் தொடர்பிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


எனவே பிள்ளையான் குழு நிராயுதபாணிகளாக்கப்பட வேண்டும் எனவும், கிழக்கு மாகாணத்திலுள்ள அக்குழுவினருடைய முகாம்கள் மூடப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகளிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்காகவே பிள்ளையான் குழு ஆயுதங்களை வைத்திருக்கின்றது என அரசாங்கம் தெரிவிக்கின்றது.


அப்படியாயின் பிள்ளையான் குழுவிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கு முஸ்லிம்கள் மாற்று வழி ஒன்று தொடர்பாகச் சிந்திக்க வேண்டிடியவர்களாக இருக்கின்றார்கள் எனவும் முஸ்லிம் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் காதர் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக அரசாங்கம் இனிமேலும் கவனம் செலுத்தாமல் இருந்தால் முஸ்லிம் மக்கள் தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்காக ஆயுதம் ஏந்த வேண்டி வரும் எனத் தெரிவித்த அவர், அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் அதனை சட்டவிரோதமானது என யாரும் கூற முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.


ஏனெனில் பிள்ளையான் குழுவுக்கு ஒரு நியாயமும் முஸ்லிம் மக்களுக்கு இன்னொரு நியாயமும் இருக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளையில் முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்படுகின்ற இந்த அநீதிகளைக் கண்டும் மௌனமாக இருக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் உடனடியாக தமது பதவிகளைத் துறக்க வேண்டும் எனவும் முஸ்லிம் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் கோரிக்கை விடுத்தார்.

No comments: